வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு



வருவது வரட்டும் மனமே

தினம் வாழ்வது நம் கடமை


பல உள்ளங்கள் சகதியில் சிக்கிய சக்கரமாக உழன்று கொண்டிருக்கிறது கடந்த காலத்தில்
பல இதயங்கள் எதிர்காலம் என்ற நிலவை நோக்கி அண்ணாந்து கிடந்து அரண்டு கொண்டிருக்கிறது
நிகழ்காலத்தில் வாழ எவரையும் கானோம்
வருவது வரட்டும்,என்ன துணிவு
இந்த துணிவிருந்தால் எதையும் சாதிக்கலாமே,
எது வந்த போதும் அச்சமில்லை
என்ற பின் மனம் உறுதியாகிற‌து
ஒருவன் உச்சீமீது வானிடிந்து வீழ்ந்த போதும்
அச்சமில்லை என்றான்.
ஒருவன் கல்லை கட்டி கடலில் போட்டாலும்
கலக்கமில்லை என்றான்
ஒருவன் கோளென்ன செய்யும்
நாளென்ன செய்யும் பயமில்லை என்றான்
ஒருவன் காலா வாடா
உனை காலால் உதைப்பேன் என்றான்.
இந்த சொற்கள் இருதயத்தில் தினம் அமல்படுத்தப்பட்டால்
இது நமது கொள்கையாக உறுதிபடுத்தபட்டு விட்டால் இன்றையவாழ்வு நிச்சயம் இனிமையாகும்.
என்ன ஆகுமோ என்ற அச்சம்
எது நடக்குமோ என்ற பயம்
இவையெல்லாம்
நமது இருதயத்தின் கண்களை குருடாக்குகின்றன‌
நமது உள்ளத்தின் கைகளை முடமாக்குகின்றன‌
வாழ்வை பலர் இனிமை என்றார்
வாழ்வை சிலர் வரம் என்றார்
வாழ்வை சிலர் சாபம் என்றார்
ஆனால் கவிஞன் வாழ்வு நம் கடமை
என்று துணிந்து சொன்னான்
நமது வாழ்வு நம் தாயின் கனவு
உனது வாழ்வு உன் தாரத்தின் உணவு
உயிரின் வாழ்வு நம் தலைமுறைக்கு ஆதாரம்
ஒவ்வொரு வாழ்வும் நம் தேசத்தின் பொருளாதாரம்
வாழ வேண்டியது கடமை,ந‌மக்காக அல்ல.
நாம் கற்ற கல்விக்காக
நாம் பெற்ற திறமைக்காக‌
நமது கலைகளை வாழ்விக்க‌
நமது கொள்கைகளை வழிந‌டத்த‌
வாழ்ந்தே தீர வேண்டும்
அது ஆண்டவன் நமக்கு இட்ட கட்டளை
வாழ்வு என்பது துயர்,அது சாபம்,அது பாவத்தின் சம்பளம்
வாழ்வு என்பது பூர்வ ஜென்ம வினை அது துயரத்தின் சுமை
இப்படியெல்லாம் புலம்பி
வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு
அது இனிமை அது நம் கடமையென நடப்போம்
இறந்த காலத்தை தூக்கி பரணில் போட்டு விட்டு
எதிர்காலத்தை தூக்கி இறைவனிடம் விட்டு விட்டு
நிகழ்காலத்தில் நெஞ்சத்தில் மகிழ்வோடு
நிறைவோடு வாழப்பழகுவோம்.

பின்னூட்டமொன்றை இடுக