இதயம் உதிரத்தால் ஓடவில்லை ஆசைகளால் ஓடுகிறது



பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா


ஆசைதான் துயரத்தின் ஆரம்பம் என்றான் புத்தன்.
ஆனால் இன்று மனித இதயம்
உதிரத்தால் ஓடவில்லை
ஆசைகளால் ஓடுகிறது
ஆசையை எடுத்து விட்டால் மனிதனே இல்லை
ஆசைபடுவது தவறில்லை இன்று
ஆனால் தவறான ஆசைபடுவது தவறு
தவறான ஆசைகள் என்பது
இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது
அதன் பட்டியல் நீளம் பல கீ.மீ நீண்டுவிட்டது
சங்க காலத்தில்
பொருந்தாக்காமம் ஒன்று மட்டுமே தெரிகிறது
இன்று கல்வி,கலவி,செல்வம்,விளையாட்டு,வீரம்
காமம்,என தவறான ஆசைகள் பெருகிவிட்டன‌
ஊழலும் அநீதியும் இதை சாத்தியமாக்கி காட்டுகின்றன‌
சிலருக்கு நிறைவேறும் போது அது பலருக்கு ஊக்கமளிக்கிறது
கள்ளமும்,கருப்பும் எல்லா துறைகளிலும் பல்கி பரவுகிறது
எந்த பெயர்ச்சொல் முன்பும்
எந்த வினைச்சொல் முன்பும்
இன்று இந்த இரண்டு வார்த்தைகளும் போட்டு விட்டால்அது சரியாக பொருந்துகிறது
கள்ளக்காதல்,கருப்புபணம்,கள்ளச்சந்தை,
என எல்லாம் பேராசைகள் பல‌
அந்த அளவுக்கு
இன்று தவறான ஆசைகள் வளர்கிறது.
படிக்காமல் தேர்வில் வெற்றி பெற வேண்டும்
கல்லூரியில் காசு கொடுத்து இடம் வேண்டும்
அடுத்தவன் மனை வேண்டும்
பக்கத்து வீட்டு மனைவி வேண்டும்
உழைக்காமல் உயர வேண்டும்
லாட்டரியில் கோடி வேண்டும்
பிரதமராக வழி வேண்டும்
காண்பதெல்லாம் வேண்டும்
எத்தனை எத்தனை ஆவல்கள்,
காணி நிலம் வேண்டும் என்று
அழகாக ஆசைகளை அடுக்கிய
பாரதி கேட்டால் கண்ணீர் விடுவான்
நிர்வாணமாக பிறந்த போது
ஆசையின்றித்தான் பிறந்தான்
வளரும் போதுதான்
புதுப்புது ஆசைகள் புதிதாய் பிறக்கின்றன‌
சின்ன சின்ன ஆசைகள் அது மகிழ்வு தரும்
கெட்ட கெட்ட ஆசைகள்
வளர்ந்தால் குற்றவாளிக் கூண்டில் போய் நிறுத்தும்
பல நேரங்களில்
இன்று இது தவறான ஆசை என்பது கூட‌
புரியாத அளவு அவை இயல்பாக ஆகி விட்டன‌
தினசரி வாழ்க்கையில் நியாபடுத்தபட்டு விட்டன‌
மன்னன் எப்படியோ
மக்கள் அப்படி என்பது அன்று அரசாட்சியில்
இன்று மக்களாட்சியில்
மக்கள் எவ்வழியோ அவ்வழியே தலைவர்களும்
தனி மனிதரின் ஆசைகள்
தவறான பாதையில் போனால்
அது சமுதாய,கலாசார அழிவின் ஆரம்பம்
முறையற்ற விருப்பங்கள்
பிறக்காமலே இருப்பது நலம்
அது நடக்காமல் போவதுஎல்லோர்க்கும் நல்லது
பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா

பின்னூட்டமொன்றை இடுக